ஷா ஆலம், ஜன 3- பூச்சோங்கில் ஜாலான் பிபிட் முதல் ஜாலான் மெர்போக் வரையிலான சாலைச் சந்திப்பில் சாலை சமிக்ஞை விளக்கு முறையை பரீட்சார்த்த முறையில் சோதனை செய்யும் நடவடிக்கையை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நேற்று தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை மேற்கொள்ளவுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி பூர்த்தியான பண்டார் பூச்சோங் ஜெயா, சாலை சந்திப்பை தரம் உயர்த்தும் பணியின் தொடர்ச்சியாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
அப்பகுதியில் சீரான வாகனப் போக்குரத்தை உறுதி செய்வதற்கு ஏற்ற நேர அமைப்பு முறையை கண்டறிவதற்கு ஏதுவாக அந்த சமிக்ஞை விளக்கு பகுதியில் இந்த பரீட்சார்த்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது என அது தெரிவித்தது.
பூச்சோங் ஜெயா வட்டார மக்கள் எதிர்நோக்கி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு 400,000 வெள்ளியை கடந்தாண்டு மே மாதம் ஒதுக்கியது.
அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்த இரு சமிக்ஞை விளக்கு சாலை சந்திப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு 80 விழுக்காடு வரை தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


