ஷா ஆலம், ஜன 3- இங்கு செக்சன் 7 பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜவுளியகமான விஸ்மா ஜாக்கெலில் நேற்றிரவு இரண்டாவது முறையாக மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்து தொடர்பில் பின்னிரவு மணி 12.40 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமீஸ் கூறினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 1.45 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.
தீயை முழுமையாக அணைக்கும் பணி அதிகாலை 3.07 மணிக்கு முடிவுக்கு வந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் உயிருட்சேதம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார். தீயை அணைக்கும் பணியில் 34 தீயணைப்பு அதிகாரிகளும் உறுப்பினர்களும் பங்கு கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஜவுளியகத்தில் கடந்த 1ஆம் தேதி காலையில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தினால் அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் 80 விழுக்காட்டுப் பகுதிகள் கடுமையாக சேதமுற்றன.
இந்த தீவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக தீயணைப்புத் துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் விஸ்மா ஜாக்கெலில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.


