ஷா ஆலம், ஜன 3- தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பிரதேச திட்டம் இவ்வாண்டு தொடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் நிகர மேம்பாட்டு மதிப்பு (ஜி.டி.வி.) ஒரு ட்ரிலியன் வெள்ளியாக இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் சிப்பாங் மற்றும் கோல லங்காட்டில் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளக்கூடிய 9 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
கோல லங்காட்டில் என்.சி.டி. எனப்படும் ஸ்மாட் இண்டஸ்ட்ரியல் பார்க் திட்டத்தை தொடக்குவதற்கு நிபந்தனையுடன் கூடிய திட்டமிடல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இங்கு சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பில் 4.0 தொழில் புரட்சி கோட்பாட்டுடன் கூடிய தொழிற்சாலை நிர்மாணிக்கப்படும் என்றார்.
இது தவிர சிப்பாங்கில் 900 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சிப்பாங் கோல்ட் கோஸ்ட் குளோபல் வில்லேஜ் திட்டம் மீதான மதிப்பீட்டுத் துறையின் ஆய்வு இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் இவ்வாண்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் எந்நேரத்திலும் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படலாம். எனக்கு தெரிந்து வரை நாட்டின் எந்த பகுதியிலும் ஒரு ட்ரிலியன் வெள்ளி மதிப்பிலான திட்டம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.
மாநில மற்றும் மத்திய அரசுகளின் பொருத்தமான அளவு ஊக்குவிப்புத் சலுகைகளைக் கொண்டு தனியார் துறையினர் இந்த மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வர் என்றும் டத்தோ தெங் சொன்னார்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் முதலீட்டாளர்களுக்கு மாநில நிலையில் வழங்கப்படும் ஊக்குவிப்புச் சலுகைகள் குறித்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.


