ஷா ஆலம், ஜன 2- முகக்கவரி அணியும் விதிமுறையைப் பின்பற்றத் தவறும் உணவகப் பணியாளர்கள் குறித்து அதிகாரிகளிடம் அல்லது ஊராட்சி மன்றப் பொறுப்பாளர்களிடம் புகார் செய்யும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தொற்று நோய்கள் பரவுவதற்கு உணவகப் பணியாளர்கள் பெரிதும் காரணமாக இருப்பதால் இவ்விவகாரத்தில் சமூகம் மிகுந்த அக்கறையுடன் இருப்பது அவசியம் என்று ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.
உணவு பரிமாறுபவர்களும் சமையல்காரர்களும் தங்களின் தவறான செயல்கள் காரணமாக நோய்கள் பரவுவதற்கு காரணமாக விளங்குகின்றனர். அவர்களில் பலர் சிகிரெட் புகைப்பதையும் சமையல் செய்தப் பின்னர் கைகளைக் கழுவாததையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்று அவர் சொன்னார்.
ஆகவே உணவகங்களில் சுகாதாரத்தை உறுதி செய்யும் விஷயத்தில் ஊராடசி மன்றங்களின் அமலாக்க நடவடிக்கைகள் தவிர்த்து சமுதாயத்தின் பங்களிப்பும் அவசியமாகும். உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக பொது மக்கள் சரியான தளங்களைப் பயன்படுத்தி விரைவாகப் புகார் செய்ய வேண்டும் என்றார் அவர்.
விதிகளை மீறும் உணவக தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி அவர் ஊராட்சி மன்றங்களைக் கேட்டுக் கொண்டார்.
உணவுகளைக் கையாள்வதில் மேலும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக ஜனவரி முதல் தேதி தொடங்கி சிலாங்கூரிலுள்ள அனைத்து உணவகங்களிலும் பணியாளர்கள் முகக் கவரி அணிய வேண்டும் என உத்தரபு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.


