ஷா ஆலம், டிச 30- மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களுக்கு 272 கவுன்சிலர்களை நியமனம் செய்ய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.
இந்த நியமனம் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை ஓராண்டிற்கு அமலில் இருக்கும் என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
கவுன்சிலர் பதவிக்கு கெஅடிலான் கட்சி சார்பில் 116 பேரும் ஜசெக சார்பில் 97 பேரும் அமானா கட்சி சார்பில் 59 பேரும் நியமிக்கப்பட்டுள்ளத்தாக அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்தாண்டிற்கான கவுன்சிலர் பதவிக்கு நியமனம் பெற்றவர்களில் 75 பேர் அதாவது 28 விழுக்காட்டினர் புதுமுகங்களாவர். அவர்களில் 57 பேர் கெஅடிலான் கட்சியையும் 11 பேர் ஜசெகவையும் 7 பேர் அமானா கட்சியையும் பிரதிநிதிக்கின்றனர்.
இந்த புதிய நியமனத்தில் 76 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கெஅடிலான் கட்சி 30 இடங்களையும் ஜசெக 30 இடங்களையும் அமனா 16 இடங்களையும் மகளிருக்கு வழங்கியுள்ளது என்றார் அவர்.
இம்முறை கவுன்சிலர் பதவிக்கு நியமனம் பெற்றவர்களில் 53 பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் எனக் கூறிய அவர், அவர்களில் 22 பேர் கெஅடிலான் கட்சியையும் 19 பேர் ஜசெகவையும் 12 பேர் அமானா கட்சியையும் பிரதிநிதிக்கின்றனர் என்றார்.


