46 கிலோ கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர்- பெண் உட்பட மூவர் கைது 

28 டிசம்பர் 2022, 9:36 AM
46 கிலோ கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர்- பெண் உட்பட மூவர் கைது 

ஷா ஆலம், டிச 28- இங்குள்ள செத்தியா ஆலம் மற்றும் கிள்ளான், தாமான் அமான் பெர்டானா வில் ஷா ஆலம் மாவட்டப் போலீசார் மேற்கொண்ட இரு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஒரு பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து சுமார் 115,342 வெள்ளி மதிப்புள்ள 146.342 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இம்மாதம் 22ஆம் தேதி சிலாங்கூர் மாநிலப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு, தென் கிள்ளான் மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை  மற்றும் சிலாங்கூர் கடல் போலீசாரின் ஒத்துழைப்புடன் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

செத்தியா ஆலமிலுள்ள லோட்டஸ் செத்தியா ஆலம் பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் பெரேடுவா அருஸ் மற்றும் இஸூசு ரக வாகனங்கள் மீது போலீசார் மேற்கொண்ட சோதனையில் 27 முதல் 35 வயது வரையிலான இரு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் நேற்று இங்குள்ள மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இஸூசு வாகனத்தை சோதனையிட்ட போது அதில் இரு கென்வாஸ் பைகளில்  19.417 கிலோ மற்றும் 11.682 கிலோ எடை கொண்ட கஞ்சா இலைகள் பொட்டலங்களாகக் கட்டப்பட்டிருந்ததை தாங்கள் கண்டதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து கைதான சந்தேக பேர்வழிகள் கொடுத்த தகவலின் பேரில் அன்றைய தினம் இரவு 10.00 மணியளவில் கிள்ளான், தாமான் அமான் பெர்டனாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வீட்டின் சமையலறையில் இருந்த பச்சை நிற பேக் ஒன்றில் 6.036 கிலோ கஞ்சா ஐந்து பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மற்றொரு கென்வஸ்  பேக்கில் 9.002 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது என்றார் அவர்.

இவ்விரு சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 46.137 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக  கூறிய அவர். இதன் மதிப்பு 115,342 வெள்ளியாகும் என்றார்.

இக்கும்பல் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. தங்களுக்குத்  தேவையான போதைப் பொருளைப் பினாங்கிலுள்ள நபர் ஒருவரிடமிருந்து கிலோ 1,500 வெள்ளி விலையில் இக்கும்பல் வாங்கியுள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் சொன்னார்.

குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் கட்டாய மரண தண்டனை வழங்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்  39பி பிரிவின் கீழ் அம்மூவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.