ஷா ஆலம், டிச 26- கடனைத் திரும்பச் செலுத்தும் இயக்கத்தின் வாயிலாக
நடத்தப்படும் அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கு பெறும் வாய்ப்பு ஹிஜ்ரா
வர்த்தக கடனுதவித் திட்ட பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
வரும் ஜனவரி முதல் தேதி இயல்பாக தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி
வரை நீடிக்கும் இயக்கத்தின் வாயிலாக 20,000 வெள்ளி மதிப்பிலான பரிசுப்
பொருள்களை ஹிஜ்ரா திட்ட பயனாளிகள் பெறலாம் என்று யாயாசான்
ஹிஜ்ரா அறவாரியம் கூறியது.
ஹிஜ்ரா பயனாளிகள் வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில்
கடனைத் திரும்பச் செலுத்தும் முறையை ஏற்பாட்டாளர்கள் ஹிஜ்ரா ஐ.டி.
முறையின் வாயிலாக கண்காணித்து வருவர்.
கடன் தொகையை நிலுவை இல்லாமல் வகையில் வாராந்திர அல்லது
மாதாந்திர அடிப்படையில் செலுத்தும் பங்கேற்பாளர்கள் இந்த பரிசுத்
திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என அது தெரிவித்தது.
இந்தப் போட்டி இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 30,000 வெள்ளிக்கும்
குறைவாக கடன் பெற்றவர்கள் முதல் பிரிவிலும் 31,000 வெள்ளிக்கும்
மேல் கடன் பெற்றவர்கள் இரண்டாவது பிரிவிலும் சேர்க்கப்படுவர்.
இந்த போட்டிக்கான வெற்றியாளர்களை குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கும் இயக்கம் பேஸ்புக் லைவ் வாயிலாக இரு பிரிவுகளாக
நடத்தப்படும்.
முதல் பிரிவு பங்கேற்பாளர்களுக்கான தேர்வு டிசம்பர் 27ஆம்
தேதியும் இரண்டாம் பிரிவு பங்கேற்பாளர்களுக்கான தேர்வு டிசம்பர் 28ஆம்
தேதியும் நடைபெறும்.


