ECONOMY

நீர் தூய்மைக்கேட்டுக்கு விபத்துக்குள்ளான லோரியிலிருந்து கசிந்த வாசனை திரவியமே காரணம்- 

24 டிசம்பர் 2022, 5:10 AM
நீர் தூய்மைக்கேட்டுக்கு விபத்துக்குள்ளான லோரியிலிருந்து கசிந்த வாசனை திரவியமே காரணம்- 

ஷா ஆலம், டிச 24- ஜெண்டோராம் ஹிலிர் சுத்திகரிக்கப்படாத நீர் இரைப்பு நிலையத்தில் நீர் மாசுபாடு கண்டறியப் பட்டதற்கு இலிட் நெடுஞ்சாலையின் வடக்கு தடத்தின் 44.1வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக லோரி ஒன்றில் இருந்து வாசனை திரவியம் கசிந்ததே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் மாநில எல்லையிலுள்ள பண்டார் செரேனியா அருகே நிகழ்ந்த இவ்விபத்தின் காரணமாக கசிந்த வாசனை எண்ணெய் செமினி ஆற்றில் கலந்து தூய்மைக்கேட்டை ஏற்படுத்தியதாக சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) கூறியது.

இந்த மாசுபாடு காரணமாக சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு மையம் ஆகியவை தற்காலிகமாக மூடப் பட்டதாக அவ்வாரியம் தெரிவித்தது.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கும் செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் இடையிலான தூரம் 6.4 கிலோமீட்டராகும். இச்சம்பவம் கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து விடியற்காலை 2.00 மணியளவில் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன என்று அது தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தூய்மைக்கேடு முழுமையாக சரி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக விபத்து நிகழ்ந்த இடத்திற்கும் சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ள இடத்திற்கும் இடையிலான பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்த பட்டுள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப் பட்டதால் சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து வட்டாரங்களில் உள்ள 472 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.