ALAM SEKITAR & CUACA

சுற்றுலா மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துவீர்- ஊராட்சி மன்றங்களுக்கு பிரதமர் உத்தரவு

19 டிசம்பர் 2022, 4:01 PM
சுற்றுலா மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துவீர்- ஊராட்சி மன்றங்களுக்கு பிரதமர் உத்தரவு

ஷா ஆலம், டிச 19- தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் சுற்றுலாத் தளங்களை அணுக்கமாக கண்காணிக்கும்படி  ஊராட்சி மன்றங்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அத்தகைய மையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் மீதும் ஊராட்சி மன்றங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

2022/2023 வடக்கிழக்கு பருவமழை குறித்தும் அதனால் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களில் கடந்த 17ஆம் தேதி முதல் பெய்யும் தொடர் மழை குறித்தும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளதாக மக்களவையில் இன்று அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பத்தாங் காலி, ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார் முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்த போது அவர் இதனைக் கூறினார்.

இச்சம்பவம் நிகழ்ந்த முதல் நாள் தொடங்கி இன்று வரை 16 அரசு துறைகளைச் சேர்ந்த சுமார் 700 உறுப்பினர்கள் தொடர்ந்தாற்போல் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

தீயணைப்புத் துறை, மலேசிய ஆயுதப் படை, பொது தற்காப்புப் படை, மலேசிய தன்னார்வலர் துறை, மலேசிய சிறப்பு தேடுதல் மற்றும் மீட்பு குழு (ஸ்மார்ட்) மற்றும் கே9 மோப்ப நாய்ப் பிரிவு ஆகியவையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தரப்புகளாகும்.

இந்த நிலச்சரிவு பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்களவை  இன்று அனுதாபம் தெரிவித்துக் கொண்டது. இச்சம்பவத்தில் 94 பேர் பாதிக்கப்பட்ட வேளையில் அவர்களில் 24 பேர் உயிரிழந்தனர், மேலும் 61 பேர் காப்பாற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.