பத்தாங் காலி, டிச 18- இருபத்து நான்கு பேரை பலி கொண்ட நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் இங்குள்ள ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் தங்கும் முகாம் நடத்துனர் மற்றும் அதன் இரு ஊழியர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு உதவுவதற்காக 50 வயதுடைய அந்த முகாம் நடத்துனரும் 30 வயது மதிக்கத்தக்க இரு ஊழியர்களும் நேற்று மாலை உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் நிலையம் வந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் சுபியான் அப்துல்லா கூறினார்.
இந்த விசாரணையில் உதவுவதற்காக இதில் சம்பந்தப்பட்ட இதரத் தரப்பினரையும் விசாரணைக்கு அழைப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.
இங்கு இங்கு சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராசாம் காமிசுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த முகாம் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக ஊராட்சி மன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் முன்னதாக கூறியிருந்தார்.
ஜாலான் கெந்திங்- பத்தாங் காலி சாலையில் அமைந்துள்ள இந்த முகாம் கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.42 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 30 மீட்டர் உயரமும் 70 மீட்டர் நீளமும் கொண்ட பகுதி சரிந்து அந்த முகாமிலிருந்து கூடாரங்களை நிர்மூலமாக்கியதில் 24 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயங்களுக்குள்ளாகினர்.
இதனிடையே, இச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் உடல்கள் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டதாக சுபியான் கூறினார்.


