கோம்பாக், டிச 18- தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் 25,000 மரங்களை நடும் திட்டத்தை செலாயாங் நகராண்மைக் கழகம் அமல்படுத்தியுள்ளது.
நகராண்மைக் கழகத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்த மரம் நடும் இயக்கம் மேற்கொள்ளப்படும். அதேவேளையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மக்கள் மத்தியில் வலியுறுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாசிட் சைய்ரி கூறினார்.
ஐம்பது மரங்கள் இங்கு நடப்படும் வேளையில் எஞ்சிய மரங்கள் சைம் டார்பி மேம்பாட்டுப் பகுதி ( எல்மினா பிசினஸ் பார்க்) உள்ளிட்ட இடங்களில் நடப்படும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக அவர் ரவாங்கில் நடைபெற்ற 25,000 மரங்கள் நடும் இயக்கத்தில் கலந்து கொண்டார். இந்த இயக்கத்தை கோம்பாக் மாவட்ட ஓராங் பெசார் டத்தோ படுகா ராஜா டான் ஸ்ரீ டத்தோ (டாக்டர்) வான் மாமுட் பா‘வான் தே தொடக்கி வைத்தார்.
செலாயாங் நகராண்மைக் கழகம் அடுத்தாண்டில் 8 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டத்தின் உத்வேகத்துடன் செயல்படும் எனவும் யாசிட் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்வோம். இம்முறை அந்த தொகை அதிகரிக்கப்பட்டு 8 கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.


