காஜாங், டிச 18- முகாமிட்டு தங்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு லைசென்ஸ் வழங்குவது மற்றும் விதிமுறைகளை நிர்ணயிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட முகாம் நடத்துநர்களுடன் மாநில அரசு கலந்துரையாடல் நடத்தும்.
இச்சந்திப்பு விரைவில் நடத்தப்படும் என்பதோடு அதன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் குறித்து சுற்றுலா அமைச்சிடம் விவாதிக்கப்படும் என்று சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இதன் தொடர்பான விவாதத்தை நாங்கள் இறுதி செய்யவிருக்கிறோம். கண்காணிப்பு, லைசென்ஸ் வெளியீடு மற்றும் விதிமுறைகளை வகுப்பதற்கு முன்னர் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்காக சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்த இருக்கிறோம் என்றார் அவர்.
நேற்று இங்கு ஜோம் பிளேய் காஜாங் எனும் நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பத்தாங் காலியில் உள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.
இத்தகைய உயிர்ப்பலி சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய மலைச்சாரல் மற்றும் ஆறுகளுக்கு அப்பால் எவ்வளவு தொலைவில் இத்தகைய முகாம்கள் அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டியை வெளியிடுவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் சொன்னார்.


