ECONOMY

ஏழை விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறோம்- சைட் மொக்தார் சாம்ராஜ்யத்தை அழிப்பது நோக்கமல்ல- அன்வார்

6 டிசம்பர் 2022, 9:26 AM
ஏழை விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறோம்- சைட் மொக்தார் சாம்ராஜ்யத்தை அழிப்பது நோக்கமல்ல- அன்வார்

புத்ராஜெயா, டிச 6- ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருப்பதால் பிரபல தொழிலதிபர் டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்-புக்காரியின் அரிசி இறக்குமதி ஆதிக்கம் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தாம் டான்ஸ்ரீ மொத்தாருடன் சுமூகமான முறையில் பேச்சு நடத்தியதாகவும் விவசாயிகளின் நலனுக்காக இம்மாதம் ஒரு கோடி வெள்ளியும் அடுத்தாண்டு 5 கோடி வெள்ளியும் வழங்க அவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அன்வார் சொன்னார்.

இது தவிர, ஏழை விவசாயிகளுக்கு உகந்த மற்றும் நியாயமான உத்தரவாதத்தைப் பாடிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் (பெர்னாஸ்) வழங்குவது தொடர்பில் நிதியமைச்சுடன் மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சைட் மொக்தார் மலாய்க்காரர் என்பதால் அவரை எளிதில் பகடி செய்யலாம் என்பதால் நாட்டிலுள்ள மற்ற தொழிலதிபர்களைக் காட்டிலும் மொக்தாரை அன்வார் தைரியமாக குறை கூறுகிறார் என்று கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் குற்றஞ்சாட்டியிருந்தது தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

சிறப்பு நான்கு இலக்க லாட்டரி குலுக்கல் எண்ணிக்கை 22லிருந்து 8ஆக குறைக்கும் போது எதிர்நோக்கியதைப் போலவே இந்த விவகாரத்திலும் பெரும் தொழிலதிபர்களை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  லாட்டரி விவகாரத்தில் சீன நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருந்ததால் தாம் சீன எதிர்ப்பாளர் என சில தரப்பினர் குற்றஞ்சாட்டினர் என அவர் தெரிவித்தார்.

பேச்சு நடத்தாமல் நான் அவரிடமிருந்து ஒப்புதலைப் பெறவில்லை. மொக்தாரின் நிறுவனம் பெரியது என எனக்குத் தெரியும். அவரது சாம்ராஜியத்தை தகர்ப்பது நோக்கமல்ல. தஞ்சோங் பெலாப்பாஸ் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் சரி செய்வதற்கும் உதவும்படி போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதியமைச்சுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.