ACTIVITIES AND ADS

இந்திய சமூகத்தின் வர்த்தக விரிவாக்க முயற்சிக்கு ஐ-சீட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்

5 டிசம்பர் 2022, 10:22 AM
இந்திய சமூகத்தின் வர்த்தக விரிவாக்க முயற்சிக்கு ஐ-சீட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்
இந்திய சமூகத்தின் வர்த்தக விரிவாக்க முயற்சிக்கு ஐ-சீட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்

உலு சிலாங்கூர், டிச 5- சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாக மாநில அரசு வழங்கி வரும் வர்த்தக உதவி தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பெரிதும் துணை புரிந்துள்ளதாக இத்திட்ட பயனாளிகள் கூறுகின்றனர்.

இந்த ஐ-சீட் திட்டத்தின் கீழ் கிடைத்த 5,600 வெள்ளியைக் கொண்டு வர்த்தகத்தை தாம் விரிவுபடுத்தியுள்ளதாக மளிகைக் கடையை நடத்தி வரும் கோகிலவாணி மூர்த்தி (வயது 36) கூறினார்.

பெரிய அளவிலான குளிர்பதனப் பெட்டியை வாங்குவதன் மூலம் வர்த்தகத்திற்கான பொருள்களை அதிகரிக்க தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

எளிதில் கெட்டுவிடக்கூடிய பொருள்களை வைப்பதற்னான இடம் தற்போது இல்லை. இந்த விரிவாக்க நடவடிக்கையின் மூலம் விற்பனைப் பொருள்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதிகமான வாடிக்கையாளர்களையும் ஈர்க்க  முடியும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள புக்கிட் செந்தோசாவில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் ஐ-சீட் உதவியைப் பெற்றுக்  கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசின் இந்த உதவித் திட்டம் இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த பெரிதும் துணை புரிவதாக கேக் மற்றும் பேக்கரி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் மணிமேகலை கோவிந்தசாமி (வயது 60) கூறினார்.

 

மாநில அரசு இந்திய சமூகத்தை புறக்கணிக்கவில்லை என்பதற்கு இந்த ஐ-சீட் உதவித் திட்டம் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மற்ற இனங்களுக்கு ஈடாக நாங்களும் வர்த்தகத்தில் உயர்வு காண்பதற்கான வாய்ப்பு கிட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஐ-சீட் திட்டத்தின் வழி கிடைத்த 5,300 வெள்ளியைக் கொண்டு மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் குளிர் பதனப் பெட்டியை வாங்க  தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

வர்த்தகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு மாநில அரசின் இந்த உதவித் திட்டம் தமக்கு பெரிதும் துணை புரிந்துள்ளதாக 20 ஆண்டுகளாக உணவகம நடத்தி வரும் ரியா ஆரோக்கியசாமி (வயது 54) தெரிவித்தார்.

உணவகத்தில் இருந்த பல உபகரணங்கள் பழுதடைந்து விட்டன. எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருள்களை பாதுகாப்பதற்கு ஏதுவாக புதிய குளிர்பதனப் பெட்டியை வாங்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.