ஷா ஆலம், நவ 28- சிலாங்கூர் அரசு ஒதுக்கீடு செய்துள்ள 70 லட்சம் வெள்ளி நிதியின் வாயிலாக மாநிலத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் மேலும் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசின் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியைக் கொண்டு விளையாட்டாளர்களுக்கு பயிற்சி வழங்குவது, அலவன்ஸ் தருவது மற்றும் விளையாட்டு உபகரணங்களை வாங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என்று சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் (எம்.எஸ்.என்.) நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.
மாநிலத்திலுள்ள 50 விளையாட்டுச் சங்கங்கள் வாயிலாக அடிமட்டம் முதல் தேசிய நிலை வரை நடைபெறும் விளையாட்டுகளில் விளையாட்டாளர்கள் பங்கேற்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் சொன்னார்.
மாநில விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியை ஒதுக்கீடு செய்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் வழி உயர்நிலையிலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடிய விளையாட்டாளர்களை உருவாக்க இயலும். குறிப்பாக, வரும் ஆண்டுகளில் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) சிறப்பான அடைவு நிலையையும் பதிவு செய்ய முடியும் என்றார் அவர்.
சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தொடர 70 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கடந்த வெள்ளிக் கிழமை 2023 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


