ஷா ஆலம், நவ 23- சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலத்திலுள்ள 26 சமூக நல இல்லங்களுக்கு 130,000 வெள்ளி மானியமாக வழங்கப்பட்டது.
மாநில அரசின் சமூக நல இல்ல உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இல்லத்திற்கும் தலா 5,000 வெள்ளி வழங்கப்பட்டதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியுள்ளவர்கள், மூத்த குடிமக்கள், பெற்றோரை இழந்த சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு உதவி வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இத்தகை சமூக நல இல்லங்களின் நடவடிக்கை மற்றும் மேம்பாட்டுச் செலவினங்கள் அதிகரித்துள்ளதை மாநில அரசு உணர்ந்துள்ளது. அந்த இல்லங்கள் எதிர்நோக்கும் செலவின அதிகரிப்பை சமாளிப்பதற்கு இந்த மானியம் ஓரளவு உதவி புரியும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரிலுள்ள சமூக நல இல்லங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சமூக நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக 85 அமைப்புகள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் சமூக நல இல்லங்களுக்கு 20 லட்சம் வெள்ளி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
டானா சுக்காரேலவான் கெபாஜிக்கான், சினர்ஜி பெரிஹாத்தின், புசாட் கெபாஜிக்கான லெஸ்தாரி ஆகிய திட்டங்கள் வாயிலாக இந்த நிதி பகிர்ந்தக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.


