கோலாலம்பூர், நவ 19- இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி ஆறு மாநிலங்கள் இன்னும் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. மொத்தம் 736 குடும்பங்களைச் சேர்ந்த 2,701 பேர் 46 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
பேராக், சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், கிளந்தான், சரவா ஆகிய மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.
இன்று பிற்பகல் 2.00 மணி வரை ஏழு இடங்களில் வெள்ளம், ஆறு இடங்களில் நிலச்சரிவு, இரு இடங்களில் சாலை அமிழ்வு, இரு இடங்களில் பாலங்கள் பழுது தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொதுப் பணித் துறை கூறியது.
கெடா, பேராக் மற்றும் கிளந்தானில் தலா இரு மாவட்டங்களிலும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், திரங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாவட்டத்திலும் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று அது தெரிவித்தது.


