பத்து கேவ்ஸ், நவ 19 – வாக்காளர்களின் வசதிக்காக மலைப் பகுதியில் அமைந்துள்ள பத்து கேவ்ஸ், கம்போங் சுங்கை கெர்தாஸ் தேசிய இடைநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையம் “பகி“ எனப்படும் இரண்டு இலகு வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது.
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்களிக்க வரும் முதியோர் அல்லது உடல் நலக்குறைவு உள்ள வாக்காளர்களின் வசதிக்காக இன்று மாலை 4.00 மணியளவில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் ஒரு இல்லத்தரசி கம்போங் மெலாயு சுபாங் சமயப் பள்ளியில் வாக்களித்துள்ளார்.

மற்ற வாக்காளர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஒ.பி.) தாம் பின்பற்றியதாக 59 வயதான நூர்சியா முகமது அலி கூறினார்.
சுகாதார அமைச்சு பரிந்துரைத்தபடி மாலை 4 மணிக்குப் பிறகு வந்தேன். தொடுதலைத் தவிர்ப்பதற்கு என் சொந்த பேனா மற்றும் கிருமிநாசினி திரவத்தை உடன் கொண்டு வந்தேன் என்றார் அவர்.
இதற்கிடையில், மாலை 3 மணி நிலவரப்படி மொத்தம் ஆறு கோவிட்-19 நோயாளிகள் இந்த மையத்தில் வாக்களித்ததாக சுகாதாரப் பணியாளரான சித்தி நபிலா டிகே ஹசன் கூறினார்.


