கோலாலம்பூர், நவ 19- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு சீராக நடைபெறுவதை உறுதி செய்ய தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி இன்று தலைநகரைச் சுற்றியுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
சட்ட விதிகளின்படி வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் சூப்ரிண்ட். கு மஷாரிமான் கு மாமூட் உடன் காலை 10 மணியளவில் கெப்போங் டேசா அமான்புரி தேசியப் பள்ளியில் உள்ள வாக்களிப்பு மையத்தில் அவர் ஆய்வினைத் தொடக்கினார்.
பின்னர் அவர், ஸ்தாப்பாக் இண்டா தேசிய பள்ளி மற்றும் சுங்கை கெர்தாஸ் தேசிய பள்ளியில் உள்ளிட்ட பல வாக்குச் சாவடிகளுக்கு வருகை மேற்கொண்டார்.
இதுவரை, நிலைமை சீராகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது. ஆனால் பல வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நேரத்தைப் பின்பற்றவில்லை எனத் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.
தங்களுக்கு தவிர்க்க இயலாத வேறு பல பணிகள் உள்ளதாக வாக்காளர்களில் சிலர் கூறுகின்றனர். மேலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைப் பின்பற்றுவது கடினம் என்று சிலர் கூறுகிறார்கள் என்று அவர் பத்து கேவ்ஸ் உள்ள சுங்கை கெர்தாஸ் வாக்குச் சாவடியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சிலரை அக்ரில் சானி சந்தித்து நலம் விசாரித்ததோடு நடப்பு நிலவரங்களையும் கேட்டறிந்ததை காண முடிந்தது.
இதற்கிடையில், நாடு முழுவதும் மதியம் 12 மணி வரை வாக்குப்பதிவு சுமூகமாக நடந்ததாக தேசிய போலீஸ் படையின் 15வது பொதுத் தேர்தல் நடவடிக்கை இயக்குனர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார்.
இதுவரை எந்த பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்றார்.
"மலேசியர்கள் விவேகம் மற்றும் உயர் ஒழுக்கத்துடன் வாக்களிக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.


