புத்ராஜெயா, நவ 19- பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது யூனுஸ் ரம்லி இன்று அதிகாலை மரணமடைந்ததைத் தொடர்ந்து பகாங் மாநிலத்தின் தியோமான் சட்டமன்றத்திற்கான 15வது பொதுத் தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இத்தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 24 தேதியாகவும் முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் டிசம்பர் 3ஆம் தேதியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் வேட்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் அதிகாரி திரும்ப அனுப்பிய தேர்தல் ரிட் மனுவை தேர்தல் ஆணையம் இன்று பெற்றதாக அவர் கூறினார்.
வரும் நவம்பர் 24ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற பிறகு 13 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 6ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான எம். கருப்பையா கடந்த புதன் கிழமை காலமானதைத் தொடர்ந்து பாடாங் செராய் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தியோமான் சட்டமன்றத் தேர்தலும் ஏக காலத்தில் நடத்தப்படுகிறது.


