ஷா ஆலம், நவ 17: காஜாங்கின் தாமான் ஹிஜாவ்வில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாங்கி நாடாளுமன்ற தொகுதி ஹராப்பான் வேட்பாளர் இன்று காலை 15வது பொதுத் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான உதவி கிடைப்பதை உறுதி செய்வதோடு, பாங்கி லாமாவில் உள்ள தற்காலிக முகாமிற்கான (பிபிஎஸ்) தயார் நிலைகளை கண்டறியவும் சியாஹ்ரெட்சன் ஜோஹன் முடிவு செய்தார்.
"100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதுவரை ஐந்து குடும்பங்கள் பிபிஎஸ் இல் பதிவு செய்துள்ளன. சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் எம்பிகேகே உதவி செய்து வருகின்றன.
"தாமான் ஹிஜாவ், காஜாங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பகுதியையும் நான் பார்வையிட்டேன், வெள்ளம் குறித்து குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்களைக் கேட்டேன்," என்று அவர் பேஸ்புக் மூலம் கூறினார்.
இன்று அதிகாலை வரை பெய்த கனமழையால் சிலாங்கூரில் ஷா ஆலம், கிள்ளான் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகத்தின் படி, சிலாங்கூர் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை இன்று அதிகாலையில் இருந்து சுமார் 200 குடும்பங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றி ஏழு தற்காலிக முகாம்களில் வைக்க ஏற்பாடாகி வருகிறது.



