கோலாலம்பூர், 17 நவ: சிலாங்கூரில் உள்ள சுபாங் ஜெயாவில் உள்ள உறைந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று காலை 17 தொழிலாளர்கள், வளாகத்தில் இருந்து கசிந்த நைட்ரஜன் வாயுவை சுவாசித்ததால் குமட்டலுக்கு ஆளானர்கள்
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், காலை 11.33 மணியளவில் அவரது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து முதலுதவி அளித்ததாகவும் கூறினார்.
எரிவாயு இணைப்பின் பிரதான குழாய் வால்வை மூடிவிட்டு, அனைத்து தொழிலாளர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டதன் மூலம் ஆரம்ப பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டது என்றார்.
"30 வயதிற்குட்பட்ட அனைத்து தொழிலாளர்களும் திடமாக உள்ளதாக அறிவிக்கப் பட்டது, ஆனால் அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதுவரை அபாயகரமான இரசாயனங்கள் (ஹஸ்மட்) சிறப்புக் குழு சம்பவத்தை கண்காணித்து வருவதாக நோரஸாம் கூறினார்.


