சுங்கை பூலோ, நவ 17- கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பதோடு வரும் சனிக்கிழமை நடைபெறும் வாக்களிப்பில் கலந்து கொள்வது தொடர்பான தகவல் மற்றும் வழிகாட்டியையும் பெற வேண்டும்.
அந்த வழிகாட்டி சம்பந்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு உரிய இணைப்புகளுடன் எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
அந்த இணைப்பை சொடுக்கும் பட்சத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கான வாக்களிப்பு வழிகாட்டிகள் மற்றும் தகவல்களை அவர்கள் பெற முடியும் என்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கிராப் போன்ற மின் வாடகை கார் மற்றும் பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தக் கூடாது, வாக்களிப்பு மையத்தில் எந்நேரமும் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்பனப் போன்ற வழிகாட்டிகள் அதில் இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.
வாக்களிப்பு பணி முடிந்தவுடன் அவர்கள் வேறு எங்கும் செல்லாது நேராக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கோவிட்-19 நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்தவுடன் அங்குள்ள சுகாதார அதிகாரிகளிடம் தங்கள் உடல் நிலை குறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கோவிட்-19 நோயாளியை சுகாதார அதிகாரி நேராக வாக்களிப்பு அறைக்கு அழைத்துச் செல்வார். இதனால் அவர்கள் மற்றவர்களைப் போல் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இராது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திடம் போதுமான ஆள்பலம் இல்லாத காரணத்தால் நம்மால் கோவிட்-19 நோயாளிகளுக்காக பிரத்தியேக தடங்களை அமைக்க இயலாது. ஆகவே, அவர்களை நேரடியாக வாக்களிக்கும் அறைக்கு அழைத்துச் சென்று வாக்களிப்பு முடிந்தவுடன் வீடு திரும்புவதற்கான ஏற்பாட்டினைச் செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.


