அம்பாங், நவ 17- அம்பாங் மற்றும் பாண்டான் தொகுதிகளில் நேற்றிரவு நடைபெற்ற ஹராப்பான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
பண்டார் பாரு அம்பாங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வந்த டத்தோஸ்ரீ அன்வாரை “ரிபோர்மாசி“ என்ற முழக்கத்துடனும் வாண வெடியுடனும் பொது மக்கள் வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அம்பாங் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் ரோட்சியா இஸ்மாயில் மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின் அடக்கு முறை காரணமாக வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் மக்கள் பெரிதும் அவதியுறுவதாக கூறினார்.
உணவு கேட்கும் வயதான கணவன் மனைவியின் நிலை என்னை மிகவும் வருந்தச் செய்தது. மக்களை அவல நிலையில் கைவிட்டு ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்களா தலைவர்கள் என அவர் கேள்வியெழுப்பினார்.
மக்கள் ஏழ்மையில் உள்ளதோடு அவர்களில் பலர் கடன் சுமையையும் எதிர்நோக்கியுள்ளனர். இது போன்ற விஷயங்களில் மாற்றம் செய்வதுதான் நமது கடமையாகும். சம்பந்தப்பட்ட தரப்பினர் களத்தில் இறங்கி வீடுகளின் கதவைத் தட்ட வேண்டும். மக்களின் உண்மை நிலை என்ன என்பதை அவர்கள் நேரில் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை மேம்படுத்துவது மற்றும் இளைஞர்களின் நலனைக் காப்பது ஹராப்பான் கூட்டணியின் தலையாய நோக்கங்களில் ஒன்றாகும் என ரோட்சியா சொன்னார்.
இதனிடையே இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அன்வார், முந்தைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் மீது சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. முதலீடுகள் வரவில்லை. சம்பள உயர்வு கிட்டவில்லை. ஆனால் அமைச்சர்கள் எண்ணிக்கை மட்டும் உயர்ந்தது என்று கூறினார்.


