ஷா ஆலம், நவ 17- பெட்டாலிங் ஜெயா தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவதற்காக எனும் அகப்பக்கத்தை அந்த தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் தொடக்கியுள்ளார்.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக கிள்ளான் பள்ளத்தாக்கில் தங்கி வேலை செய்து வரும் தமக்கு இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் நன்றாகத் தெரியும் என்று லீ சியோன் சுங் கூறினார்.
சமுதாயம் தொடங்கி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தேசிய நிலை வரை மாற்றங்களைத் தொடர்வதில் பொது மக்களின் ஒத்துழைப்பை நாடுவது தனது பிரதான அபிலாஷையாகும் என்று அவர் சொன்னார்.
கடந்த 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அகப்பக்கத்தில் பெட்டாலிங் ஜெயா தொகுதி மக்களின் வளப்பத்திற்கான நான்கு அடிப்படை அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில் துறை, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மறுசீரமைப்பு செய்வது, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவது அதன் முதல் அம்சமாகும்.
சீரான போக்குவரத்து முறையை ஏற்படுத்துவது இரண்டாவது அம்சமாகவும் இளைஞர்களுக்கு ஆக்கத்திறன் ஊட்டுவது மூன்றாவது அம்சமாகவும் சுபிட்சமான சமூகத்தை உருவாக்குவது நான்காவது அம்சமாகவும் உள்ளது என்றார் அவர்.


