சிரம்பான், நவ 15- சைட் சிராஜூடின் முகாமைச் சேர்ந்த 24 ஆயுதப்படை வீரர்கள் பயணம் செய்த 11வது அரச பட்டாளத்தின் கவசப் பிரிவு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இச்சம்பவம், ஜாலான் செங்காவ்-பிலின் சாலையில் இன்று பிற்பகல் நிகழ்ந்தது. இச்சம்பவத்தின் போது அந்த வீரர்கள் அனைவரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்ப வாக்களிப்பில் கலந்து கொள்வதற்காக வாக்குச் சாவடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இருபத்து நான்கு முதல் முப்பது வயது வரையிலான அந்த வீரர்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து தொடர்பில் இன்று பிற்பகல் 12.15 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. ஹஸ்ரி முகமது கூறினார்.
அவர்கள் அனைவரும் போர்ட்டிக்சனில் உள்ள புஸ்பாடா எனப்படும் இராணுவ வீரர்கள் அடிப்படை பயிற்சி மையத்தில் உள்ள வாக்களிப்பு மையத்திற்கு வாக்களிக்கச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் ஒரு வீரர் கடுமையான காயங்களுக்குள்ளாகி ரெம்பாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நால்வருக்கு மிதமான காயங்களும் மேலும் 19 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. இவ்விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.


