கோலாலம்பூர், நவ 15- பதினைந்தாவது பொதுத் தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் சேதப்படுத்தப்பட்டது மற்றும் இதர புகார்கள் மீதான விசாரணையை போலீசார் வெளிப்படையான முறையில் மேற்கொள்வர்.
இது போன்ற சம்பவங்கள் கடந்த பொதுத் தேர்தல்களின் போதும் நடைபெற்றுள்ளதாக கூறிய தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி, இம்முறை அத்தகைய சம்பவங்கள் சிறிய அளவில் நிகழ்ந்துள்ளதோடு நிலைமை கட்டுப்பாட்டிலும் உள்ளதாகச் சொன்னார்.
தவறிழைத்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாகுபாடின்றி வெளிப்படையான விசாரணையை போலீசார் மேற்கொள்வர் என்று புக்கிட் அமானில் இன்று தொடக்க வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்கை அளித்ததோடு வாக்களிப்பை நடைமுறையையும் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக மலேசியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை முன்னிட்டு சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வினவப்பட்ட போது, இக்கலக்கட்டத்தில் நாடு முழுவதும் போலீசார் பணியில் அமர்த்தப்படுவர் என்று அவர் சொன்னார்.
மலேசியர்கள் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறியிருந்தார்.


