உலு சிலாங்கூர், நவ 15- உலு சிலாங்கூர் மக்களின் நலனக்காக உருவாக்கப்படும் சிறப்பு நிதியில் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை சேர்க்கவுள்ளதாக அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் கூறியுள்ளார்.
அந்த நிதியில் 30 விழுக்காடு இளையோர் மேம்பாட்டிற்கும் 30 விழுக்காடு மகளிர் மேம்பாடு மற்றும் தொழில்திறன் பயிற்சிக்கும் எஞ்சிய தொகை தொகை சுகாதார நோக்கங்களுக்கும் செலவிடப்படும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.
இளையோர் மற்றும் மக்களின் சமூக நல நடவடிக்கைகளுக்கு அந்த நிதியிலிருந்து உதவி வழங்குவதில் எந்தவொரு நிர்வாக நடைமுறையும் கடைபிடிக்கப்படாமல் உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.
வெளிநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவோருக்கும் உடனடியாக நாங்கள் உதவி வழங்குவோம். நாட்டின் நற்பெயரை உலகளவில் பரவச் செய்யும் இளைய தலைமுறையினரின் முயற்சி தேவையற்ற நிர்வாக நடைமுறைகள் காரணமாக தடைபட்டு விடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், சக்கர நாற்காலி தேவைப்படுவோருக்கு அது குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக உதவி வழங்குவோம். சக்கர நாற்காலி பெறுவதற்கு விண்ணப்ப பாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அந்த உதவிக்காக நோயாளிகள் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியாது என்றார் அவர்.
அவசர வேளைகளில் உதவிக்கு அதிகம் காத்திருக்க முடியாது. ஆகவே, எனது சம்பளத்தைக் கொண்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரும்புகிறேன் என்று உலு சிலாங்கூர் ஹராப்பான் தேர்தல் கொள்கையறிக்கையை வெளியிடும் நிகழ்வில் அவர் சொன்னார்.


