ஷா ஆலம், நவ 15- பேராக் மாநிலத்திலுள்ள ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான் பிரசாரப் பயணத்தை ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்கிறார்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுடன் நடத்தப்படும் பேராக் மாநில சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தைக் கைப்பற்றுவதற்காக அங்கு முற்றுகையிட்டுள்ள அன்வார், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.
சுங்கை சிப்புட்டில் உரையாற்றிய அன்வார், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பக்கத்தான் கோட்டையாக இருந்து வரும் இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு போட்டியிடும் ஹராப்பான் வேட்பாளர் எஸ்.கேசவனை வெற்றியடையச் செய்யுமாறு தொகுதி வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
இத்தொகுதியில் கேசவனை எதிர்த்து மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கூட்டணியாக ஹராப்பான் விளங்குகிறது என்று அன்வார் குறிப்பிட்டார்.

நாட்டையும் மக்கள் நலனையும் காக்கத் தவறிய தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகளின் ஆசை வார்த்தையில் கவரப்பட வேண்டாம் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பேராக் மாநிலத்தின் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் ஹராப்பான் பிரசாரத்தின் போது பெரும் திரளான மக்கள் கூடியுள்ளதை சித்தரிக்கும் புகைப்படங்களை அன்வார் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பேராக் மாநிலத்தின் தம்புன் தொகுதி வேட்பாளரான அன்வார், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி போட்டியிடும் பாகான் டத்தோ தொகுதியையும் முற்றுகையிட்டார்.


