கோல சிலாங்கூர், நவ 15- வெளிநாட்டு வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட தபால் வாக்கு முறையின் அமலாக்கத்தை மறுசீரமைப்பு செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தபால் வாக்காளர்களில் பலர் இன்னும் தங்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறவில்லை என்பது நிகழக்கூடாத ஒரு சம்பவமாகும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மோசடிகள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதால் தபால் வாக்குகள் உரிய நேரத்தில் கிடைக்காத சம்பவங்கள் இனியும் நடைபெறாமலிருப்பதை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும் என்று அவர் சொன்னார்.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நிபுணத்துவ முறையில் செயல்பட வேண்டும் எனக் கூறிய அவர், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாது எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோல சிலாங்கூர், கம்போங் புக்கோட் கூச்சிங் தெங்கா சமூக மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற தொகுதி மக்களுடனான விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தபால் வாக்காளர்கள் குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளை இன்னும் பெறவில்லை என்று ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.


