உலு சிலாங்கூர், நவ 14- இளையோருக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் மூலம் இளம் வாக்காளர்களைக் கவர்வதற்கான அணுகுமுறையை உலு சிலாங்கூர் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் பயன்படுத்திக் கொள்கிறார்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் இளையோர் வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக அவர்களுடன் பொழுதுபோக்காக உரையாடும் பாணியை அவர் தனது பிரச்சார அணுகுமுறையாகப் பயன்படுத்துகிறார்.
இளையோருடன் உரையாடும் போது அவர்களின் திட்டங்களையும் மன உணர்வுகளையும் அறிந்து கொள்ள முடிவதோடு பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அமல்படுத்தவிருக்கும் திட்டங்களையும் அவர்களுடன் பகிர்ந்த கொள்ளவும் முடிகிறது என்று டாக்டர் சத்தியா கூறினார்.
இளைஞர்களுடனான உரையாடலின் போது வேலை வாய்ப்பு, சமூகவியல் பிரச்னைகள், கல்வி, சுகாதாரம், நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தொலைநோக்குத் திட்டம் குறித்து அவர்களிடம் எடுத்துரைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரசாரத்தின் போது இளைஞர்கள் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அணி, கூடைப்பந்து விளையாட்டு, ஜூம்பா உள்ளிட்ட நிகழ்வுகளில் தாம் பங்கு கொண்டதாகவும் அவர் சொன்னார்.



