கோலாலம்பூர், நவ 14- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் கோவிட்-19 நோயாளிகள் முககவசத்தை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அதே சமயம், மற்ற வாக்காளர்களும் முககவசம் அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்கள் இ-ஹெய்லிங் எனப்படும் மின் வாடகைக் கார்கள் உள்பட பொது போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோவிட்-19 நோய் கண்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னரும் வாக்களித்தப் பின்னரும் எந்த இடத்திலும் நிற்கக்கூடாது. வாக்களித்தப் பின்னர் அவர்கள் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் சீராக நடைபெறுவதற்கும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக கோவிட்-19 நோயாளிகள் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு மற்ற வாக்காளர்களும் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார் அவர்.
மூன்றாவது தடுப்பூசியைப் பெறாதவர்கள் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பதற்கு ஏதுவாக அந்த ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெறும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
வாருங்கள், வரும் 15வது பொதுத் தேர்தலில் வாக்காளர்களும் வாக்களிப்பு மைய ஊழியர்களும் கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதை ஒன்றிணைந்து உறுதி செய்வோம் என அவர் தெரிவித்தார்.


