கோலாலம்பூர், நவ 14 - சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை பறிமுதல் செய்வதற்கான அரசின் முயற்சியை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சத்து மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் நிறுவனத்தின் (1எம்டிபி) பல கோடி வெள்ளி நிதி மோசடியினால் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளான நஜிப். கடந்த 2018 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அவர் தற்போது 1எம்டிபி ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரது தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, நஜிப்புடன் தொடர்புடைய பல சொத்துகளில் சோதனை நடத்தியதில் கிட்டத்தட்ட 30 கோடி அமெரிக்க டாலர்கள் (137 கோடி மலேசிய ரிங்கிட்) மதிப்புள்ள கைப்பைகள் மற்றும் நகைகள் உட்பட பணம் மற்றும் சொத்துகளை போலீசார் கைப்பற்றினர்.
அந்த சொத்துகள் 1எம்டிபி மூலம் பெறப்பட்டவை என்பதை மறுத்து வரும் அந்த முன்னாள் பிரதமர், பெரும்பாலான பொருட்கள் பரிசாக கிடைத்தவை என்று கூறியுள்ளார்.
2,000 க்கும் மேற்பட்ட நகைகள், ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் கைப்பைகளை பறிமுதல் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியை நீதிமன்றம் நிராகரித்தது.
அவை இப்போது நஜிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திருப்பித் தரப்படும் என்று நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷபி அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறினார்.


