அம்பாங், நவ 14- மக்களே எஜமானர்கள் என்றும் மக்கள் பிரதிநிதிகளால் அவர்களின் சேவையாளர்கள் என்றும் அம்பாங் தொகுதிக்கான ஹராப்பான் கூட்டணி வேட்பாளர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியைக் கொண்டு வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் எனது சம்பளம் மக்களின் (வரிப்) பணத்திலிருந்து தரப்படுகிறது. இதன் பொருள் மக்கள் எனது எஜமானர்கள் என்பதே. ஆகவே நான் பணிவுடன் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அம்பாங், தாமான் சஹாயா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு உதவக்கூடிய மனப்பக்குவத்தை மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுவே சரி செய்யக்கூடிய மற்றும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் கொண்டுச் செல்லக்கூடிய ஒரு சிந்தனையாகும் என அவர் சொன்னார்.


