புத்ராஜெயா, நவ 14: இன்று மதியம் தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் மத்திய அரசின் நிர்வாக மையத்தில் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட இச்சம்பவத்தில், பிரின்ட் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள பெர்சியாரன் ஸ்ரீ பெர்டானா பிரின்ட், 11 ஏ உள்ள அரசு குடியிருப்பு மற்றும் பிரின்ட் 9 ஆம் பகுதியில் உள்ள சுகாதார கிளினிக் ஆகிய பகுதிகளில் சுமார் 0.3 மீட்டர் அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளன.
மாலை 4.30 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து மொத்தம் 20 உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்று புத்ராஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் முகமது அபிஸி ஜோகிப்லி கூறினார்.
வடிகாலில் தண்ணீர் செல்ல தடைபட்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாகவும் தீயணைப்பு வீரர்கள் கால்வாயை சுத்தம் செய்ததாகவும் அவர் கூறினார்.
"சில மணி நேரங்களுக்கு பிறகு நீர் முற்றிலும் குறைந்து விட்டது, பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தற்காலிக தங்குமிடத்திற்கு மாற்றப்படவில்லை," என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
இதற்கிடையில், புத்ராஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ.சி.பி. ஏ. அஸ்மாடி அப்துல் அஜீஸ் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியது டன், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
"தடுக்கப்பட்ட வடிகாலில் தீயணைப்புப் படையினர் அகற்றியதை தொடர்ந்து தண்ணீர் முற்றிலும் வடிந்தது. இந்த சம்பவத்தால் எந்த வாகனமும் சேதமடையவில்லை,'' என்றார்.
15வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்தையும் இந்த திடீர் வெள்ளச் சம்பவம் ஈர்த்தது. டாக்டர் நோரைஷா மைடின் அப்துல் அஜீஸ் (பக்காத்தான் ஹராப்பான்) உள்ளிட்டோர் இன்று இரவு மக்களை சந்திக்கின்றனர்.


