சிப்பாங், நவ 14- சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தொடர்ந்து வலுவுடன் செயல்படுவதை உறுதி செய்ய அக்கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கீழுள்ள சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக சிப்பாங் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் அய்மான் அதிரா சாபு கூறினார்.
மாநில மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிலாங்கூர் அரசு அமல்படுத்தி வருகிறது. மாநில அரசுக்கு கிடைக்கும் வருமானமும் வளங்களும் சமூக நலத் திட்டங்கள் மற்றும் சிறப்பாக கொள்கைகள் மூலம் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களில் சுகாதார பரிசோதனை இயக்கம், அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை ஆகியவையும் அடங்கும். மக்கள் நலனை காப்பதில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வரும் ஹராப்பான் அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்பது மக்களின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள சாலாக் பெர்டானா பிஸ்னஸ் பார்க்கில் நேற்று நடைபெற்ற சிப்பாங் ஹராப்பான் ஏற்பாட்டிலான மின்-விளையாட்டுப் போட்டியில் நிகழ்வுக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த தொகுதியில் முன்னாள் மகளிர், குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சரும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளருமான டத்தோஸ்ரீ ரீனா ஹருண், தேசிய முன்னணி வேட்பாளர் அனுவார் பாசிரான் உள்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.


