கோம்பாக், நவ 14- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் கூடுதல் வருமானம் பெறுவதற்கு ஏதுவாக கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள மகளிருக்காக பிரத்தியேகத் தொழில்திறன் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மகளிர் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் தங்களிடமிருக்கும் ஆற்றல் வெளிக்கொணரவும் இந்த திட்டம் துணை புரியும் என்று கோம்பாக் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நம்மிடம் தனித்துவமான திறன் இருக்கும் பட்சத்தில் நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்ற படிப்பினையை பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. நான் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் மகளிர் மற்றும் வீட்டிலுள்ள தாய்மார்களின் வருமானத்தை பெருக்குவதற்காக தொடர்ச்சியாக மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சித் திட்டம் சமையலை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்காது. மாறாக, சந்தைப்படுத்துதல் மற்றும் இதர அம்சங்களையும் இது உள்ளடக்கியிருக்கும் என அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள தாமான் செலாசேவில் மகளிர் மினி கார்னிவல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோம்பாக்கின் வளர்ச்சியை இலக்காக கொண்ட ஐந்தாண்டு கால திட்டமான கௌரவமிக்க கோம்பாக் பிரகடனத்தை அமிருடின் கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்டார். தொழில் திறன் பயிற்சிகள் வாயிலாக மகளிரை ஆக்கத்திறன் கொண்டவர்களாக உருவாக்குவது, மக்கள் சொந்த வீட்டைக் கொண்டிருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகள் அந்த பிரகடனத்தில் இடம் பெற்றுள்ளன.


