ஷா ஆலம், நவ 14- தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட மருத்துவமனை காப்பார் தொகுதியில் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிர்மாணிக்கப்படும் என்று காப்பார் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
மேரு நகரில் அமைக்கப்படவுள்ள அந்த பெரிய மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஐ.ஜே.எம். லேண்ட் நிறுவனம் தம்மிடம் தெரிவித்துள்ளதாக டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமிட் கூறினார்.
சுமார் 83 கோடி வெள்ளி மதிப்பிலான அந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று முடிந்த போதிலும் அதிகாரப்பூர்வ விழா இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
காப்பார் தொகுதியில் மருத்துவமனை நிர்மாணிக்கப்படுவது தொடர்பான கோரிக்கையை அப்துல்லா சானி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சி புரிந்த பக்கத்தான் அரசாங்கம் அந்த மருத்துவமனையின் நிர்மாணிப்புக்கு ஒப்புதல் அளித்தது.
காப்பார் தொகுதி மக்களின் வசதிக்காக மேலும் இரு திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா சானி தெரிவித்தார்.
கார்களைப் பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதற்காக கிள்ளான் துறைமுகத்திலிருந்து கூட்டரசு நெடுஞ்சாலை செல்லும் கனரக வாகனங்களுக்காக சிறப்பு வழித்தடம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அத்திட்டங்களில் அடங்கும் என்றார் அவர்.
காப்பாரில் பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனது மற்றொரு கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யு.சி.) தலைவருமான அவர் சொன்னார்.


