கோல சிலாங்கூர், நவ 14- எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில்திறன் பயிற்சிகளை வழங்கப்படும் என்று கோல சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடப்படும் சிறப்பு தேர்தல் கொள்கையறிக்கையின் ஒரு பகுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்படுவதாக தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
இளையோருக்கு குறிப்பாக கல்வியில் நாட்டமில்லாதவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி மிகவும் அவசியமாகும். ஆகவே, கல்வியில் ஆர்வமில்லாதவர்களுக்கும் வேலை கிடைப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை வழங்குவது முக்கியமானதாக அமையும் என்றார் அவர்.
தற்போதைய சூழலில் இளம் தலைமுறையினரில் பலர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித த் துறைகளில் (ஸ்தெம்) ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.
விரைவில் வெளியிடப்படவுள்ள கோல சிலாங்கூர் தொகுதிக்கான இந்த தேர்தல் கொள்கையறிக்கையில் கல்வி, வாழ்க்கை முறை, மின்-விளையாட்டு ஆகிய அம்சங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.


