கோலாலம்பூர், நவ 14- கட்டுப்பாட்டை இழந்த கார் டிரெய்லர் லோரியுடன் மோதிய விபத்தில் பெண்மணி ஒருவர் உயிரிழந்ததோடு அக்காரில் பயணம் செய்த மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாகினர்.
இவ்விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு தடத்தின் சுங்கை பூலோ மேம்பால உணவகத்திற்கு அருகில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.
இவ்விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 6.10 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து எண்மர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
எழுவர் பயணம் செய்த ஹோண்டா எக்கோர்ட் ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரியை மோதியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.
காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அப்பெண் காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக கூறிய அவர், அம்மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தினர் என்றார்.
இந்த விபத்தில் அந்த மாதுவின் 50 வயது கணவரும் 11 வயது மகளும் கடுமையான காயங்களுக்குள்ளாகினர். எட்டு வயது முதல் எட்டு மாதம் வரையிலான மற்ற நான்கு பிள்ளைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றார் அவர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


