பெட்டாலிங், 13 நவ: சிலாங்கூர் தன்னார்வ படை தொண்டர்களின் (சேவை) 3,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த மாதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் கட்டுக்குள் உள்ளது, இதுவரை உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபடவில்லை என்று இளம் தலைமுறையினரின் வளர்ச்சிக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
"எங்களிடம் சேவை மற்றும் சேவை மீட்பு என்ற இரண்டு குழுக்கள் உள்ளன, அவை சிலாங்கூர் தீயணைப்புத் துறையுடன் பயிற்சி பெறுகின்றன. அவர்களின் சேவை தேவைப்பட்டால் அனைவரும் தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் போல் பெரிய வெள்ளம் வராது என்று நம்புகிறோம். எவ்வாறாயினும், நாங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்," என்று முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
இன்று இங்குள்ள புக்கிட் ரஹ்மான் புத்ராவில் பக்காத்தான் ஹராப்பான் சுங்கை பூலோ நாடாளுமன்ற வேட்பாளர் டத்தோ ஆர் ரமணனின் பிரச்சாரத்தில் பங்கேற்ற போது அவர் அவ்வாறு கூறினார்.
இந்த வாரம் கன மழையைத் தொடர்ந்து கிள்ளான் மற்றும் ஷா ஆலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இன்று காலை 11 மணி நிலவரப்படி, மொத்தம் 697 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை வெள்ளப் பேரழிவைச் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள், குறிப்பாக பாதிக்கப் பட்டவர்களை தேடுவது மற்றும் மீட்பதில் (SAR) மிகவும் ஒழுங்கமைக்க பட்டதாகவும் வேகமாகவும் இருப்பதாக நேற்று டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கூற்றுப்படி, நவம்பர் இரண்டாம் வாரத்தில் கடும் இடரை முன்னறிவித்த மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையைத் தொடர்ந்து ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.


