குவாந்தான், நவ 12- கிழக்கு கரை நெடுஞ்சாலையின் 165.8வது கிலோ மீட்டரில் மாரான் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காலை மணி 7.00 அளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் கார் ஓட்டுநரான சித்தி பத்திமா யூஸ்ரி (வயது 20), அவரின் சகோதரர் அகமது பஷிர் (வயது 27), மற்றும் இளைய சகோதரியான சஹேடா (வயது 15) ஆகியோர் மரணமடைந்ததாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி நோர்ஸம்ரி அப்துல் ரஹ்மான் கூறினார்.
மற்றொரு இளைய சகோதரியான அடாவியா (வயது 11) தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களுக்காக தெமர்லோ சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்
அந்த நால்வரும் பயணம் செய்த பெரோடுவா கஞ்சில் கார் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறமிருந்த சாலைத் தடுப்பை மோதியதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
ஜோகூர் கூலாய் நகரைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் ஜெராண்டூட் தாபிஸ் பள்ளியில் பயிலும் அடாவியாவை ஏற்றிக் கொண்டு கூலாய் திரும்பிக் கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


