கோலாலம்பூர், நவ 12- இலகு இரயில் சேவையின் (எல்.ஆர்.டி.) சமிக்ஞை மற்றும் தொடர்பு முறை நல்ல நிலையில் இருப்பதோடு வெகு விரைவில் கிளானா ஜெயா தடத்திற்கான சேவை தொடங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
அதிகாரிகள் இன்று அத்தடத்தில் 38 செட் இரயில்களை ஐந்து நிமிட இடைவெளியில் சோதனை ஓட்டத்தை மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
அந்த தடத்தில் சமிக்ஞை மற்றும் தொடர்பு முறைகள் நல்ல நிலையில் உள்ளன. வெகு விரையில் அனைத்து 38 முதல் 40 வரையிலான இரயில்களையும் கிளானா ஜெயா தடத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்கான சாத்தியம் உள்ளது என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக தாம் ஜொகூர், ஆயர் ஹீத்தாமில் இருந்த போதிலும் இந்த இரயில் சேவை தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சீரற்ற சேவையின் காரணமாக கிளானா ஜெயா முதல் அம்பாங் ஜெயா வரையிலான எல்.ஆர்.டி சேவை இம்மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக பிராசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் அறிவித்திருந்தது.


