ஷா ஆலம், நவ 12- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 217 குடும்பங்களைச் சேர்ந்த 903 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் உள்ள எட்டு பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.
கிள்ளான், மேருவில் அதிகளவிலான மக்கள் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். இங்குள்ள சுங்கை பிஞ்சாய் மையத்தில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 643 பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக அது கூறியது.
இம்மையம் தவிர்த்து கம்போங் புடிமான் அல்-பாலா பள்ளிவாசல், ஜோஹான் செத்தியா தேசிய பள்ளி மற்று பெக்கான் மேரு ஆரம்ப சமயப் பள்ளியிலும் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியுள்ளனர் என்று அது தெரிவித்தது.
கோல சிலாங்கூரில் ஸ்ரீ ஹர்மோனி டேவான் எம்.பி.கே.எஸ்., டேவான் ஓராங் ராமாய் கம்போங் ராஜா மூசா, ஜெராம் தேசிய பள்ளி ஆகியவற்றில் துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, சுங்கை சிலாங்கூரில் நீர் மட்டம் 7.8 மீட்டராகவும் சுங்கை பெர்ணமில் 2.3 மீட்டராகவும் காணப்படுகிறது. இவ்விரு ஆறுகளிலும் நீரின் அளவு அபாயக்கட்டத்தை தாண்டி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


