கோலாலம்பூர், நவ 12- நாடு முழுவதும் நேற்று 432 தேர்தல் பரப்புரைகள் பெர்மிட் இன்றி நடத்தப்பட்டதை போலீசார் கண்டறிந்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 46 ஆக இருந்தது.
சபாவில் மிக அதிகமாக 425 பரப்புரைகளும் சிலாங்கூரில் மூன்று பரப்புரைகளும் கிளந்தானில் இரண்டு பரப்புரைகளும் பெர்லிஸ் மற்றும் பகாங்கில் தலா ஒரு பரப்புரையும் பெர்மிட் இன்றி நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.
நேற்று தேர்தல் பிரசாரம் நடத்துவதற்கு நாடு முழுவதும் 1,037 பெர்மிட்டுகள் வழங்கப்பட்டன. கெடாவில் 137 பெர்மிட்டுகளும் நெகிரி செம்பிலானில் 172 பெர்மிட்டுகளும் வழங்கப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் பேராக் (155), சிலாங்கூர் (147), பகாங் (131), கிளந்தான்(98), மலாக்கா (54), சரவா (44), பினாங்கு (22), பெர்லிஸ் (21), கோலாலம்பூர் 20) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இது தவிர அரசியல் கட்சிக் கொடிகளை சேதப்படுத்தியது, மிரட்டியது, நிந்தனை செய்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் 14 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதனிடையே, கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 427 மற்றும் 435 பிரிவுகளின் கீழ் பேராக் மற்றும் திரங்கானுவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


