ஷா ஆலம், நவ 12- வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இரு படகுகளை சுங்கை பூலோ தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர்.ரமணன் ஏற்பாடு செய்துள்ளார்.
அதே சமயம் கம்போங் மிலாயு சுபாங்கில் ஏற்படும் வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிய தனது பொறியியல் துறை அனுபவத்தையும் அவர் பயன்படுத்தவிருக்கிறார்.
நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம் குறித்து நாங்கள் ஆய்வு நடத்தியுள்ளோம். அந்த வெள்ளப் பிரச்னைக்கான தீர்வு இன்றிரவு அறிவிக்கப்படும்.
பொறியியலாளர் என்ற முறையில் எனக்குள்ள அனுபவம் வெள்ளத்திற்கான காரணத்தைக் கண்டறிவதை எளிதாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சில ஏற்பாடுகளை இன்றிரவு நான் அறிவிக்கவிருக்கிறேன். அவை தற்காலிக ஏற்பாடுகள் அல்ல என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் என்றார் அவர்.
நேற்று, கம்போங் மிலாயு சுபாங் குடியிருப்பாளர்களைச் சந்தித்தப் பின்னர் சிலாங்கூர்கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை 3.30 மணி தொடங்கி பெய்த அடை மழை காரணமாக கம்போங் மிலாயு சுபாங் மற்றும் யு6 பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஷா ஆலம் மற்றும் கிள்ளான் வட்டாரத்திலும் பெய்த கனமழை காரணமாக பலர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தனர்.


