கோம்பாக், நவ 12- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை வழங்குவதன் மூலம் நாட்டை வழி நடத்துவதற்குரிய வாய்ப்பினை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வழங்குமாறு நாட்டு மக்களை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
தோல்வியடைந்த கட்சிகளான பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலிடம் நாட்டின் எதிர்காலத்தை பணயம் வைக்க வேண்டாம் என கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவருமான அவர் வலியுறுத்தினார்.
நெருக்கடியான தருணங்களில் கூட நாட்டை சிறப்பான முறையில் வழிநடத்தும் ஆற்றல்மிக்கவராக ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குகிறார் என்று கோம்பாக் தொகுதி ஹராப்பான் வேட்பாளருமான அவர் சொன்னார்.
பெரிக்காத்தான் நேஷனல் டான்ஸ்ரீ மொகிடின் யாசினை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது. தேசிய முன்னணி டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் அல்லது டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் அரசாங்கத்தை நிர்வகிப்பதில் தோல்வி கண்டவர்களாவர் என அவர் குறிப்பிட்டார்.
கோம்பாக் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு போட்டியிடும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அந்த தோல்வி கண்ட அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்தார். அவர்களின் ஆட்சியில்தான் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டனர், உணவுப் கிடைக்கவில்லை எனக் கூறி வெள்ளைக் கொடி ஏந்தினர் என்றார் அவர்.
இங்குள்ள கம்போங் சங்காட் கிரியில் நேற்றிரவு நடைபெற்ற மக்கள் விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.


