சுங்கை புசார், நவ 12- சிறப்பான வேலை வாய்ப்பினை பெறுவதற்காக சுங்கை புசார் தொகுதியை விட்டு வெளியே செல்லும் இளைஞர்கள் விவகாரத்தில் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சைபுல்யாஸான் எம். யூசுப் கூறினார்.
இப்பிரச்னைக்குக் தீர்வு காணும் வகையில் மேம்பாட்டிற்கான வாய்ப்புள்ள தொழில் துறை ஒருங்கமைப்பை ஏற்படுத்தவுள்ளதாக அவர் சொன்னார்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள் இங்கு குறைவாக உள்ளதை காண முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் சுங்கை புசார் தொகுதிக்கான ஹராப்பான் கூட்டணியின் பத்து அம்ச வாக்குறுதியில் இங்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியுள்ளோம் என்றார் அவர்.
இத்தொகுதியில் தொழில்துறை ஒருங்கமைப்பு உருவாக்கப்படும் போது தேவைப்படும் ஆள்பலத்தை ஈடுசெய்வதற்கு ஏதுவாக இங்குள்ள இளைஞர்களுக்கு அவர்கள் சார்ந்த துறைகளில் திறன் பயிற்சிகளை வழங்குவதிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
இது தவிர, கால்நடை வளர்ப்பு மற்றும் நவீன விவசாயத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் விஷயத்திலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


