உலு சிலாங்கூர், நவ 11- ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஓம்பாக் ரிண்டு மற்றும் மாட் கிலாவ்-கெபங்கித்தான் பாஹ்லவான் உள்ளிட்ட மலாய்ப் படங்களின் தீவிர ரசிகராக உலு சிலாங்கூர் ஹராப்பான் வேட்பாளர் விளங்குகிறார்.
மலாய் சகாக்களின் மத்தியில் வளர்ந்தவரான டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ஏரோன் அஜிஸ், மாயா கரின், லிசா சுரிஹானி நடித்த ஓம்பாக் ரிண்டு படத்தை ஐந்து முறை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார்.
ஓம்பாக் ரிண்டு படத்தை அதிக முறை நான் பார்த்துள்ளேன். ஏன் ஐந்து முறை அப்படத்தைப் பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இதைக் கேட்பதற்கு வேடிக்கையாகத்தானே இருக்கிறது என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
அதோடு மட்டுமின்றி மாட் கிலாவ் படத்தை மலாய் வீரர்களின் பாரம்பரிய உடையோடு தலைப்பாகையும் அணிந்து 200 ஆதரவற்ற சிறார்களுடன் சென்று கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான் உத்வேகத்துடன் மலாய் பாரம்பரிய உடை மற்றும் தலைப்பாகையுடன் அப்படத்தைக் காணச் சென்றேன். அந்த படத்தின் வாயிலாக பாரம்பரியம் மற்றும் மலேசியா வரலாற்றின் உருவாக்கம் உள்ளிட்ட விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் என்றார் அவர்.
நாம் சமயத்தையும் கலாசாரத்தையும் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பினைப் பெறுவோம். இவையாவும் நாம் அறிந்து கொள்ளக்கூடிய மற்றும் கவனம் செலுத்தக்கூடிய விஷயங்களாகும் என அவர் கூறினார்.


