கிள்ளான், நவ 11- இம்முறை வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் பணிகள் சீரான மற்றும் விரைவான முறையில் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மோசமான வானிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
நவம்பர் மாதம் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சம் நேற்று ஊர்ஜிதமானதோடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பலர் மீட்கப்பட்டதோடு பள்ளிகளும் துயர் துடைப்பு மையங்களாகவும் உபயோகப்படுத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
ஓரிரு நாட்கள் அல்லாமல் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான அறிகுறியும் தென்படுகிறது. மேரு போன்ற பகுதிகளில் வழக்கமாக 80 மில்லி மீட்டராக இருக்கும் மழைப் பொழிவின் அளவு நேற்று அதிகப்பட்சமாக 104 மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்தது என்றார் அவர்.
தற்போது சிலாங்கூரில் வெள்ளம் ஏற்பட்டதற்கு வடிகால் முறை காரணமல்ல எனக் கூறிய அவர், 104 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்ததே காரணம் என்றார்.
இந்த பிரச்சனையை சிலாங்கூர் மட்டுமின்றி மலாக்கா, பேராக், சபா போன்ற மாநிலங்களும் எதிர்நோக்கியுள்ளன. சில வேளைகளில் குறிப்பாக நீர் பெருக்கு ஏற்படும் போது இந்த சந்தேகம் எழக்கூடும் என அவர் தெரிவித்தார்.


